குடியரசுத் தலைவர் தேர்தலில் 3 ஆம் அணி வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என்று அரியானா மாநில முன்னாள் முதலமைச்சரும், ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்களில் ஒருவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா தெரிவித்துள்ளார்.
சண்டிகாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை 2 வது முறையாக தேர்வு செய்ய தங்கள் கூட்டணி விரும்பியதாகவும், ஆனால் அதற்கு அவர் விரும்பவில்லை என்றும் சவுதாலா கூறினார்.
தாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரிக்கப் போவதில்லை என்று கூறிய சவுதாலா, அதேசமயம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றார். குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் அளவுக்கு தங்கள் கூட்டணிக்கு ஓட்டுகள் இல்லை என்றும், எனவே தங்கள் அணி சார்பில் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை பற்றி கூறுவது வேதனை அளிக்கிறது என்று சவுதாலா அப்போது தெரிவித்தார்.