கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களான ஆந்திரா, கர்நடகா, கேரளாவிலும், அதனைத் தொடர்ந்து மகராஷ்டிராவிலும் பெய்துவரும் கன மழைக்கு இதுவரை 126 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரமாக மும்பையிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் பெய்த கன மழைக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் மட்டும் மழைக்கு இதுவரை 37 பேர் இறந்துள்ளதாகவும், 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து பெய்த மழையால் 40 மாவட்டங்களைச் சேர்ந்த 222 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கர்னூல் மாவட்டத்தில் மட்டும் 85,000 மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி 51 முகாம்களில் தங்கியுள்ளனர்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் 39 பேர் பலியாகியுள்ளனர். பெல்காம், பிஜபூர், குல்பர்கா, உடுப்பி, வடகர்நாடக மாவட்டங்கள் மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடுகிறது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிப்பதற்காக முதலமைச்சர் குமாரசாமி நாளை உயர்நிலை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
கேரளாவில் வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களும் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மட்டும் மழைக்கு 30 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தையும் தற்போதைய மழை விட்டுவைக்கவில்லை. வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சில இடங்களில் இன்று ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மும்பை கிராண்ட் சாலையில் மழையால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர்.