குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வெற்றி உறுதிபடுத்தப்பட்டால் மீண்டும் போட்டியிடத் தயார் என்று 3-ம் அணியினரிடம் கூறியதன் மூலம் குடியரசுத் தலைவர் பதவியை அப்துல் கலாம் தவறாகப் பயன்படுத்திவிட்டார் என்று காங்கிரஸ் கடுமையாகக் குற்றம் சாற்றியுள்ளது!
ஐக்கிய முற்போக்கு, இடதுசாரி கூட்டணிகளின் சார்பாக குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, நாடாளுமன்ற விவகாரம் ஆகியவற்றிற்கான மூத்த அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி, "நிச்சயமானால் என்ற வார்த்தைக்கு எண்ணிக்கையை உறுதி செய்யுங்கள் என்று அர்த்தம். இப்படிப்பட்ட வார்த்தை குடியரசுத் தலைவர் கூறியிருப்பது துரதிருஷ்டமானது. குடியரசுத் தலைவர் பதவியை சிறுமைப்படுத்த யாருக்கும் அரசமைப்புச் சட்டம் அதிகாரம் தரவில்லை" என்று கூறினார்.
"குடியரசுத் தலைவர் என்றால் குடியரசுத் தலைவர்தான். டாக்டர் கலாம் மீது எங்களுக்கு உயர்ந்த மதிப்பு உள்ளது. ஆனால், நிச்சயமானால் என்ற சொல்லைக் கூறியதன் மூலம் தனது பதவியை அவர் தவறாகப் பயன்படுத்திவிட்டார்" என்று தாஸ்முன்ஷி குற்றம் சாற்றினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மற்றொரு மூத்த அமைச்சரான சரத் பவாரும் உடனிருந்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் டாக்டர் கலாமை காயப்படுத்திவிட்டன என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, குடியரசுத் தலைவர் பொறுப்பின் மீது எந்தவிதமான கருத்தும் சொல்லப்படவில்லை என்று கூறிய தாஸ்முன்ஷி, அரசமைப்பு சட்டம் பற்றியோ அல்லது நாகரீக நடத்தை குறித்தோ ஜெயலலிதாவிடம் இருந்து தாங்கள் எதையும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.
ஜெயலலிதா தூண்டுதலினால் தி.மு.க. தலைவர் கருணாநிதி தாக்கப்பட்ட போது அவருடைய நாகரீக சரித்திரத்தை தொலைக்காட்சியில் நாங்கள் பார்த்தோம் என்றும் தாஸ்முன்ஷி கூறினார்.