குடியரசுத் தலைவர் தேர்தலில் 3வது அணி வேட்பாளராக அறிவித்துள்ள அப்துல் கலாமை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிக்க மறுத்துவிட்டது.
அஇஅதிமுக, சமாஜ்வாடி, தெலுங்குதேசம் உள்ளிட்ட 8 கட்சிகளின் தலைவர்கள் நேற்று சென்னையில் கூடி குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை வேட்பாளராக நிறுத்துவது என்றும், கலாமை இது தொடர்பாக சந்தித்துப் பேசுவது என்றும் முடிவு செய்தனர்.
குடியரசுத் தலைவராக உள்ள அப்துல் கலாமை இரண்டாவது முறையாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவளிக்க வேண்டும் என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டிருந்தார்.
இது குறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேச்சாளர் சுஷ்மா சுவராஜ், குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரோன் சிங் ஷெகாவத்தை ஆதரிப்பது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எடுத்த முடிவில் மாற்றமில்லை என்று கூறினார்.
அப்துல் கலாமை மீண்டும் போட்டியிடச் செய்வதற்காக 2 மாதங்களுக்கு முன்னரே முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான குழு அவரை சந்தித்தது என்றும், மீண்டும் போட்டியிட கலாம் மறுத்ததனால்தான் துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி, 3வது அணியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டதால் போட்டி ஐ.மு.-இடது கூட்டணிகளின் வேட்பாளராக பிரதீபா பாட்டீலுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ள ஷெகாவத்திற்கும் இடையேதான் என்பது உறுதியாகிவிட்டது.