விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், அரசு ஆகிய மூன்றிற்கும் இடையே பயனுள்ள கூட்டாண்மை ஏற்பட உதவிடும் வகையில் வங்கிகளின் செயல்பாடு உயர்த்தப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தியுள்ளார்!
மகாராஷ்ட்ர மாநிலம் எவத்மால் என்ற இடத்தில் அம்லோக்சந்த் மகா வித்யாலயாவின் பொன் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அப்துல் கலாம், விவசாயிகள் தரம் வாய்ந்த விதைகள், தரம் வாய்ந்த உரம் உள்ளிட்ட இடுபொருட்கள், தரம் வாய்ந்த பூச்சி மருந்து ஆகியவற்றை கூட்டுறவு சங்கங்களில் இருந்து பெறும் வசதியை உருவாக்க வேண்டியது மிக மிக அவசியமாகும் என்று வலியுறுத்தினார்.
விவசாயிகள் அதிக அளவிற்கு தற்கொலை செய்துகொண்ட இப்பகுதியில் வேளாண் உற்பத்தியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை கலாம் வலியுறுத்திப் பேசினார்.
பத்திண்டா பகுதியில் விவசாயிகளிடையே உரையாற்றிய போது, பருத்தில் 2வது பசுமைப் புரட்சியை உருவாக்குவதன் அவசியத்தை விளக்கிக் கூறியதை நினைவுகூர்ந்த கலாம், விவசாயிகள் பருத்தியை பயிர் செய்து அதனை சந்தைக்கு கொண்டு சென்று விற்பதை விட அதிலிருந்து நூல், துணி, ஆடை என பொருட்களை உருவாக்கி அதை தேச, சர்வதேச சந்தைகளில் விற்க முன்வர வேண்டியது அவசியம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மகாராஷ்ட்ர முதலமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக் தலைமை வகித்தார். (பி.டி.ஐ.)