Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடியரசுத் தலைவர் வேட்பாளர் நாளை அறிவிப்பு : கருணாநிதி!

குடியரசுத் தலைவர் வேட்பாளர் நாளை அறிவிப்பு : கருணாநிதி!

Webdunia

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிகள் சார்பாக நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பது நாளை அறிவிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்!

குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், இடதுசாரிகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதையடுத்து, அவர்களுடன் கருணாநிதி இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பரதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் ஆகியோருடன் பேசிய பிறகு பிரதமரையும், பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, பேச்சுவார்த்தை சரியான திசையில் நடந்து கொண்டிருப்பதாகவும், வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆலோசிக்கப்படும் பெயர்களின் விவரங்களை வெளியிட முடியாது என்றும் கூறினார்.

ஆனால், நாளைக்குள் கருத்தொற்றுமை ஏற்படும் என்றும், நாளை காலையோ அல்லது மாலையோ ஐ.மு. கூட்டணி - இடதுசாரி கூட்டணியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

வேட்பாளரை அறிவிப்பதற்கு இவ்வளவு தாமதம் ஏற்படுவது ஏன் என்று கேட்டதற்கு, "இது சாதாரண விஷயமல்ல, குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துவிடக்கூடாது" என்று கூறிய கருணாநிதியிடம், வேட்பாளர் தேர்வு முடிந்துவிட்டதா என்று கேட்டதற்கு, இல்லை என்றும், ஆனால் அம்முடிவை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இப்பிரச்சனையில் இடதுசாரிகள் தங்கள் நிலையை விட்டுக்கொடுக்க மறுக்கிறார்களா என்று கேட்டதற்கு, எவர் ஒருவரும் தங்கள் நிலையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்று கருணாநிதி கூறினார்.

இதற்கு முன்னதாக பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத், நாளை காலைக்குள் யார் வேட்பாளர் என்பது தெரிந்துவிடும் என்று கூறினார்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தீர்களே, அது முடிவாகிவிட்டதா என்று கேட்டதற்கு, தாங்களும் சில பெயர்களை முன்மொழிந்திருப்பதாகக் கூறினார். (யு.என்.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil