குடியரசுத் தலைவருக்கான காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய இரண்டு மூன்று பேர்கள் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தப் பிறகு முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லி விமான நிலையத்திலிருந்து, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்திற்கு சென்ற அவர், அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனும், பிரதமர் மன்மோகன் சிங்குடனும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, இன்றும் நாளையும் தாம் டெல்லியில் தங்கயிருப்பதாகவும், அப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து பல தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவி்த்தார்.
வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரசுக்கும் இடது சாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று குறிப்பிட்ட கருணாநிதி, இன்னும் இரு தினங்களுக்குள் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் முடிவுச் செய்யப்பட்டுவிடும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய இரண்டு மூன்று பேர்கள் விவாதிக்கப்பட்டதென்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் முதலமைச்சர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் கரத் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் ஏ.பி. வரதன் ஆகியோர் சந்தித்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.