மேகாலயா மாநிலத்தில் காசி மலைத் தொடரின் மேற்குப் பகுதியில் கிடைக்கும் யுரேனியத்தை தோண்டி எடுக்க சுரங்கம் அமைப்பது குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது!
காசி மலைத் தொடரில் உள்ள கில்லங்-பின்டங்சோஹியோங் என்ற இடத்தில் நிலக்கரியைத் தோண்டி எடுப்பதைப் போல திறந்தவெளி சுரங்கத்தை உருவாக்கி கச்சா யுரேனியத்தை எடுக்கவும், அதனை மாவ்தாபா என்ற இடத்தில் சுத்திகரிப்பு செய்யும் ஆலையை அமைக்கவும் இந்திய யுரேனியக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு அப்பகுதி மக்களிடையே பரவலாக எதிர்ப்பு உள்ளது. யுரேனியம் தோண்டி எடுக்கும் போது கதிர்வீச்சு ஏற்படும் என்றும், அதனால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றும் கூறி மேகாலயா மக்கள் உரிமைப் பேரவை எனும் அமைப்பு எதிர்த்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய யுரேனியக் கழகமும், மேகாலயா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து நோங்பா ஜின்ரின் கிராமத்து மக்களின் கருத்தை அறிய ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் கடையடைப்பு நடந்தது.
பலத்த பாதுகாப்பிற்கு இடையே நடந்த கருத்து கோரலில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். யுரேனிய சுரங்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்று பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதே மாநிலத்தில் உள்ள ஜாடுகுடா என்ற இடத்தில் யுரேனியம் தோண்டி எடுக்கப்படுகிறது என்றும், அதனால் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்றும், எனவே மத்திய அரசு திட்டத்தை ஆதரிப்பதாகவும் பலர் கூறியுள்ளனர்.
எனது பிணத்தின் மீதுதான் இங்கு சுரங்கம் அமைக்க முடியும் என்று மேகாலயா மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் லிங்டோ கூறியுள்ளார்.
ரூ.814 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள கில்லங்-பின்டங்சோஹியோங்-மாவ்தாபா திட்டம் நமது நாட்டில் தற்பொழுது இயங்கிவரும் 13,000 உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளை அளிக்கவல்லது என்று கூறப்படுகிறது.
காசி மலைத் தொடரில் உள்ள டோமியாசியாத், வாக்கின் ஆகிய இடங்களில் 9,500 டன் அளவிற்கு யுரேனியம் ஆக்சைடு வளம் இருப்பதாக 1984 ஆம் ஆண்டு இந்திய அரசின் அணுப்பொருள் துறை கண்டுபிடித்தது. மேகாலயாவில் உள்ள யுரேனியம் இருப்புதான் இந்தியாவிலேயே பூமிக்கு அடியில் குறைந்த அளவு ஆழத்தில் கிடைக்கும் மிகச் சிறந்த யுரேனியமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டு ரூ.300 கோடியில் மதிப்பிடப்பட்ட இத்திட்டம் தற்பொழுது ரூ.814 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (யு.என்.ஐ.)