Publish Date: Tue, 12 Jun 2007 (10:59 IST)
Updated Date: Tue, 12 Jun 2007 (10:58 IST)
நாகர்கோவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயில் விசாகப்பட்டினம் அருகே உள்ள டுவாடா என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.
நாகர்கோவில் இருந்து ஹவுராவுக்கு அதிவிரைவு ரயில் நேற்று முன் தினம் புறப்பட்டு சென்றது. நேற்று இரவு விசாகப்பட்டினம் அருகே உள்ள டுவாடா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது ரயிலின் 11 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.
இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரயில்வேத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே விபத்திற்கான காரணமென்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.