ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக நமது நாட்டிற்கு எரிவாயு கொண்டு வருவதற்கான 700 கோடி டாலர் திட்டத்தை நிறைவேற்ற அடுத்த மாதம் இறுதியில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது!
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறைச் செயலர் எம்.எஸ். சீனிவாசன் இத்தகவலைத் தெரிவித்தார்.
குழாய் மூலம் எரிவாயுவைக் கொண்டு வருவதற்கான கட்டணம் குறித்தும், குழாய் பாதுகாப்பு உள்ளிட்ட செலவீனங்களுக்கான கட்டணம் குறித்தும் விரைவில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யும் என்றும், அதன்பிறகு அமைச்சர்கள் அளவில் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான பணி வரையறை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் சீனிவாசன் கூறினார்.
இந்தியா, பாகிஸ்தான் பெட்ரோலிய அதிகாரிகள் மட்டத்தில் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் திட்டப் பணிக்கான ஒப்பந்தம் இறுதியாகும் என்றும் சீனிவாசன் கூறினார்.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் சமையல் எரிவாயுவை ஒரு பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு 4.93 டாலர் விலைக்கு அளிக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த எரிவாயுவை குழாயின் மூலம் கொண்டு வரவும், அதன் பராமரிப்புச் செலவுகளுக்காகவும் ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு 0.70 முதல் 0.75 வரை டாலர்களை கட்டணமாகக் கேட்கிறது.
ஆனால் இந்தியா 0.55 டாலர்களை (ஒரு வருடத்திற்கு 22 கோடி டாலர்) கட்டணமாக அளிக்க முன்வந்துள்ளது.
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு 2,300 கி.மீ. தூர குழாய் மூலம் ஒரு நாளைக்கு கொண்டுவரப்படவுள்ள 6 கோடி கியூபிக் மீட்டர் எரிவாயுவை இந்தியாவும், பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்ளும் திட்டமிது. (பி.டி.ஐ.)