நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 9 விழுக்காடும், தேச வருவாய் 15 விழுக்காடும் உயர்ந்திருந்தாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 25 விழுக்காடு அதிகரித்துள்ளது!
ஆசோச்சம் எனும் தொழிலகங்களின் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், 2006 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களுடன், 2007 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களை ஒப்பிடுகையில் சர்க்கரையைத் தவிர அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் 25 விழுக்காடு அளவிற்கு விலை உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது.
இத்தகவலை தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறிய ஆசோச்சம் தலைவர் வேணுகோபால் என் தூத், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்குக் காரணம், சந்தையில் போதுமான அளவிற்கு அத்தியாவசியப் பொருட்கள் கிட்டாமையே என்று கூறினார்.
கோதுமை, பருப்பு வகைகள், மசலாக்கள், உணவு எண்ணெய், மாமிசம், மாசிசப் பொருட்கள், சமையல் எண்ணெய், பால் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகள் சராசரியாக 25 விழுக்காடு அதிகரித்துள்ளதென வேணுகோபால் கூறினார்.