ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று குஜ்ஜார் சமூகத்தினர் இன்று ஜெய்பூர், அஜ்மீர் நகரங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி குஜ்ஜார் சமூகத்தினர் கடந்த செவ்வாய் கிழமை தௌஷா மாவட்டத்தில் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது காவல் துறையினர் தடியடி நடத்தியதையடுத்து கலவரம் வெடித்தது. அப்போது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 குத்ஜார்கள் உயிரிழந்தனர். மூன்று காவல் துறையினர் கொல்லப்பட்டனர். ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
காவல் துறை துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது 2 காவல் நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மேலும் சிலர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரிலும் அஜ்மீர் நகரிலும் குத்ஜார் மகாசபா முழு அடைப்பிற்கு இன்று அழைப்பு விடுத்ததை அடுத்து அங்கு கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
குத்ஜார் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவர்களோடு ராஜஸ்தான் மாநில அமைச்சர்கள் லஷ்மி நாராயணன் தாவே ராஜேந்திர ராதோர் மதன் திலவர் திகம்பர் சிங் ஆகியோர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆயினும் குத்ஜார்களின் போராட்டம் காவல் துறையினருடன் மோதலும் தொடர்ந்து கொண்டு இருப்பதாக ராஜஸ்தான் செய்திகள் கூறுகின்றன.