கல் உடைப்பது முதல் சாலை போடுவது வரை எண்ணற்ற உடல் உழைப்புகளில் ஈடுபட்டுவரும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!
தலைநகர் டெல்லியில் பிரதமர் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேச குறைந்தபட்ச திட்டத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்டவைகளை நடைமுறைப்படுத்துவது என்று முடிவெடுத்தது.
அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் காக்க தேச ஆலோசனை வாரியத்தை அமைப்பது எனவும், அது வழங்கும் பரிந்துரைகளையும், திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களை தனித்தனியாக கணக்கில் எடுத்து அதன் அடிப்படையில் திட்டங்களை நிறைவேற்றுவது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் உடலிற்கு ஊறு ஏற்படும் பொழுது அவர்களுக்கு உரிய வாழ்க்கை பாதுகாப்பு அளிப்பது.
உடல் நலத்தைப் பேண சிறப்புத் திட்டங்கள். வயதான காலத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து நலன்களையும் திட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்துவது. இதற்கான சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்வது.
தேச அளவில் மட்டுமின்றி, மாநில அளவிலும் ஆலோசனை வாரியங்களை அமைப்பது, அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் தி்ட்டங்கள் அவர்களைச் சென்று சேர்கின்றதா என்பதனைக் கண்காணிக்க தனி அமைப்பு ஆகியன இச்சட்டவரைவில் இடம் பெறும்.
தேச மாதிரி மதிப்பீடு அமைப்பு 1999-2000 ஆவது ஆண்டில் நடத்திய மாதிரி ஆய்வின்படி அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 39.7 கோடி. இவர்களில் 2.8 கோடி பேர் அமைப்பு சார்நத தொழிலாளர்களாகவும் 36.9 கோடி பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாகவும் உள்ளனர்.
விவசாயத்தில் மட்டும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் 23.7 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். கட்டுமான தொழிலில் 1.7 கோடி பேரும், சுரங்கம், தொழிலகம், சேவைத் துறைகளில் மற்றவர்களும் ஈடுபட்டுள்ளனர்.