இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்ய 123 ஒப்பந்தத்தை உருவாக்க இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முடிவு எட்டப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்!
குடியரசுத் தலைவர் மாளிகையில் துணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா செல்வி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான 123 ஒப்பந்தம் உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக வெளியாகிவரும் செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறினார்.
இம்மாத இறுதியில் அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ் இந்தியா வருகிறார். அவருடன் இந்திய அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லையெனில், ஜூன் மாதத் துவக்கத்தில் ஜெர்மனியில் நடைபெறவுள்ள ஜி-8 மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் புஷ் உடன் 123 ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.