சீக்கிய மதத்தினருக்கும், தேரா சச்சா சௌதா எனும் மதப் பிரிவினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கவலை தரத்தக்கது என்று கூறியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அந்த வன்முறையை பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்!
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெ. ராதிகா செல்வி மத்திய துணை அமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், வன்முறையை கட்டுப்படுத்துவது குறித்து பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலுடனும், ஹரியானா முதலமைச்சர் பூப்பிந்தர் சிங் ஹுடாவுடனும் பேசியுள்ளதாகக் கூறினார்.
மோதலைத் தவிர்க்க தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் கூறினார்.
விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறிய பிரதமர், 5 விழுக்காட்டிற்குள் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
தென்னக நதிகளை இணைப்பது குறித்து தமிழக முதலமைச்சர் கருணாநிதி எழுதியுள்ள கடிதம் பற்றி கருத்து கேட்டதற்கு, அது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும், சுற்றுச்சூழல், நதி நீர் பகிர்வு ஆகியன தீர்ப்பதற்கு கடினமான பிரச்சனைகள் என்றும், அதற்கு சில காலம் ஆகும் என்றும் கூறினார்.