மத்திய அமைச்சரவையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களை வகித்த தயாநிதி மாறன் பதவி விலகியதை அடுத்து அப்பொறுப்பு தற்பொழுது வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருக்கும் அ. ராசாவிற்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறன் விலகியதை அடுத்து அப்பொறுப்பிற்கு யாரை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி பிரதமருக்கும் காங்கிர தலைவர் சோனியா காந்திக்கும் எழுதிய கடிதங்களை மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி டெல்லிக்கு கொண்டு சென்று அவர்களிடம் அளித்தார்.
தயாநிதி மாறன் விலகியதை அடுத்து அவர் வகித்து வந்த பொறுப்பை அமைச்சர் அ. ராசாவிற்கும் அ. ராசா வகித்து வந்த வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகப் பொறுப்பை தற்பொழுது நிதி அமைச்சக துணை அமைச்சராக உள்ள பழனிமாணிக்கத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் கருணாநிதி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பழனிமாணிக்கம் முக்கிய அமைச்சராக பொறுப்பேற்பதால் அவர் வகித்து வந்த துணை நிதி அமைச்சர் பொறுப்பை திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் ஏ. குமரனுக்கு வழங்குமாறு பரிந்துரை செய்துள்ளப்பட்டுள்ளதாகவும் டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்பொழுது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் கூட்டத் தொடர் முடிந்த பிறகு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்றும் அதற்கு முன்னதாக இவ்வார இறுதியில் டெல்லியில் செல்லும் முதலமைச்சர் கருணாநிதி அமைச்சரவை மாற்றம் குறித்து பிரதமரிடமும் காங்கிர தலைவர் சோனியா காந்தியிடமும் பேசுவார் என்று கூறப்படுகிறது.