ரேடார் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க விமானம் தாழ்வாக செலுத்தப்பட்டதாக தகவல்
, திங்கள், 17 மார்ச் 2014 (18:33 IST)
கோலாலம்பூரிலிருந்து கடந்த 8 ஆம் தேதி பீஜிங்கிற்கு புறப்பட்ட பயணிகள் விமானம் 239 பயணிகளோடு மாயமானது. தற்போது வரை இந்த விமானம் தொடர்பாக தெளிவான தகவல்கள் பெறப்படாத நிலையில் இந்த விமானம் ரேடார் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் தாழ்வாக ஓட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
239
பயணிகளுடன் மாயமான MH 370 விமானத்தை 10 க்கும் மேற்பட்ட நாடுகள், 40 க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் விமானங்கள் முழுமூச்சாக தேடிவந்தன. நடுவானில் இந்த விமானம் மாயமாகி 10 நாட்கள் ஆகியுள்ள நலையில் விமானத்திற்கும், அதிலிருந்த பயணிகளுக்கும் என்ன ஆனது என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்நிலையில், மாயமான விமானம் குறித்து மலேஷிய பிரதமர் நஜிப் ரசாக் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்தை கண்டறிய உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
தற்போது, இந்த விமானம் ரேடார் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் தாழ்வாக ஓட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரேடார் கண்டறிதலை தவிர்க்க சுமார் 5000 அடி தாழ்வாகவோ, அல்லது அதற்கும் தாழ்வான உயரத்திலோ இந்த விமானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.