கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க 75% வாக்குப்பதிவு
, திங்கள், 17 மார்ச் 2014 (17:04 IST)
பொருளாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதாக இருந்த திட்டத்தை கடைசி நேரத்தில் ரஷியாவின் ஆதரவாளரான அதிபர் விக்டர் யனுகோவிச் மறுக்கவே அங்கு மக்களின் போராட்டம் தொடங்கியது.
கடந்த நவம்பரில் தொடங்கிய இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியதன் விளைவாக விக்டர் யனுகோவிச் தனது அதிபர் பதவியைத் துறந்து, தப்பியோட நேர்ந்தது. இந்நிலையில், இதற்கு முன்னர் ஐக்கிய ரஷ்ய குடியரசின் ஒரு பகுதியாக இருந்து, பிரிந்து, தற்போது உக்ரைனின் ஒரு பகுதியாக உள்ள கிரிமியா ரஷ்யாவுடன் மீண்டும் இணைய முடிவெடுத்தது. இந்த முடிவினை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா, பிரிட்டைன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் மறுத்து வரும் அதே வேளையில் இந்தத் திட்டத்திற்கு ரஷியா ஆதரவு அளித்தது. கிரிமியாவின் பெரும்பான்மை மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கான ஆதரவைத் தெரிவித்துள்ளதால் இதுகுறித்து பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. கிரிமையாவை ரஷ்யா ஏற்றுக் கொண்டதற்கான அடையாளத்தைப் போன்று கிரிமியாவில் ரஷிய ராணுவம் கால் பதித்துள்ளது எதிர்ப்பு நாடுகளின் கண்டனத்துக்குள்ளானது. கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பாக கிரிமியா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், அதனை தொடர்ந்து நடைபெறவுள்ள வாக்கெடுப்பும் செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்க வேண்டும் என ஐ.நா.சபையில் அமெரிக்கா ஒரு அவசர தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தின் மீது ஐ.நா.பாதுகாப்பு சபையில் இடம் பெற்றிருக்கும் 13 உறுப்பு நாடுகள் நேற்று வாக்களித்தன. அமெரிக்காவின் தீர்மானத்தை தனது ’வீட்டோ’ உரிமையின் மூலம் ரஷியா எதிர்த்தது. ரஷியாவின் நட்பு நாடான சீனா ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்து ஒதுங்கியிருந்தது. இந்நிலையில், கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பு (உள்ளூர் நேரப்படி) நேற்று காலை தொடங்கியது. வாக்குப்பதிவு முடிவடையும் சற்று நேரத்துக்கு முன்னர் கிடைத்த தகவலின்படி, இந்த தேர்தலில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். முன்னதாக சிம்பெரோபோலில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த ரஷ்யாவுக்கு ஆதரவான கிரிமியாவின் பிரதமர் செர்கி அக்சியொனோவ் , ‘இது வரலாற்று சிறப்பு மிக்க தருணம்’ என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.