இலங்கையில் நடந்த “உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை ஒப்புக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகமானது” என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார்.
இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரிந்தும் அதனை வெளியிடாமல் மறைப்பது மட்டுமின்றி, அதனைக் குறைத்துக் காட்டும் முயற்சியில் ஐ.நா. ஈடுபட்டு வருகிறது என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி டைம்ஸ் இதழ் குற்றம் சாற்றியிருந்தது.
போரின் இறுதி கட்டத்தில், அதாவது மே15ஆம் தேதி வரை கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் எண்ணிக்கை 20,000க்கு மேல் என்று ஐ.நா.பணியாளர்கள் சேகரித்த தகவல் ஐ.நா.வின் கொழும்பு தூதருக்கு அளிக்கப்பட்டதென்றும், அதனை வெளியிட வேண்டாம் என்று கொழும்பு வந்த ஐ.நா. பொதுச் செயலர் அலுவலகத்தின் தலைமை அலுவலர் விஜய் நம்பியார் கூறியதாகவும், அதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிடாமல் ஐ.நா. மறைத்துவிட்டதாகவும் தி டைம்ஸ் குற்றம் சாற்றியிருந்தது.
இதற்கு பதிலளித்த பான் கீ மூன், எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் எதையும் ஐ.நா. செய்யவில்லை என்றும், “எண்ணிக்கை எவ்வளவாக இருப்பினும், அது ஒப்புக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகமானது” என்று கூறியுள்ளார்.
அங்கு எந்த அளவிற்கு மனித உரிமை மீறல் நடந்துள்ளது என்பதை அறிய பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறிய பான் கீ மூன், “அப்படிப்பட்ட பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றால், முதலில் அந்நாட்டு அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், இரண்டாவதாக, அதற்கு ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவு வேண்டும்” என்று அதற்குரிய தடைகளை விளக்கியுள்ளார்.
மே 22, 23ஆம் தேதி இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவிசாய்க்குமாறு தான் சிறிலங்க அதிபரை கேட்டுக் கொண்டதாகவும், வெளிப்படையான விசாரணைக்கும், பொறுப்பாக்கலிற்கும் அவசியம் உள்ளதை தான் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.