Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு!

Advertiesment
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சே
, திங்கள், 23 மார்ச் 2009 (21:18 IST)
வன்னிப் பகுதியில் சிறிலங்கப் படையினரின் தொடர் தாக்குதலால் நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலைமைகள் குறித்துப் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை, 26ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சந்திப்பு நடைபெறும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சேவின் அழைப்பு குறித்து வரும் 25ஆம் தேதி த.தே. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி ஆராயும் என்றும், அதன்பிறகே சந்திப்பில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் சேனாதிராஜா கூறியுள்ளார்.

இதற்கிடையே, தமிழீழ விடுதலைப புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருந்ததை இங்கிலாந்து வரவேற்றுள்ளதுடன், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என்று சிறிலங்க அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்த அழுத்தத்தை சமாளிப்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மகிந்த அழைப்பு விடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்ட்ரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என்றும், பிரச்சனைக்குத் தீர்வுகாண அமைதிப் பேச்சை துவக்க வேண்டும் என்றும் பலமுறை கோரிக்கை விடுத்தபோதெல்லாம் தட்டிக்கழித்துவந்த அதிபர் ராஜபக்ச, தற்பொழுது திடீரென தமிழ் தேச கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதன் காரணம் என்னவென்ற கேள்வியும் எழுகிறது.

சிறிலங்க அரசு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிலிருந்து வெளியேற சர்வதேச நிதியத்திடம் 1.9 பில்லியன் டாலர் கடன் கேட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று சர்வதேச நிதியம் கடனளிக்க வேண்டுமெனில், அதன் நிர்வாகப் பொறுப்புக் குழுவில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உறுப்பினர்களின் ஒப்புதல் வேண்டும். இதுவே கடன் பெருவதற்கு எதிரான பெரும் தடையாகும் நிலை உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், சிறிலங்க நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்த அதிகர் ராஜபக்ச, இராணுவச் செலவிற்கு மட்டும் இதுவரை ஒதுக்கப்படாத அளவிற்கு 1.6 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டாலர்கள் ஒதுக்கினார். இது உலக நாடுகளின் புருவத்தை உயர்த்தியது மட்டமின்றி, இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு காணும் அவருடைய கடினமான நிலையை உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில்தான், ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து மார்ச் 07ஆம் தேதிவரையிலான 47 நாட்களில் மட்டும் சிறிலங்க இராணுவத்தின் தாக்குதலில் 2,683 தமிழர்கள் வன்னிப்பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 7,241 பேர் படுகாயமுற்றனர் என்றும் குறித்து உருவாக்கப்பட்டிருந்த ஐ.நா.வின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் அறிக்கை வெளிக்கொணரப்பட்டது.

இந்த அறிக்கை அடிப்படையில் இலங்கையில் நிலவும் சூழல் குறித்து ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று ஆஸ்ட்ரியா, மெக்ஸிகோ, கோஸ்டா ரீகா ஆகிய நாடுகள் வலியுறுத்தின, இதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, பிராண்ஸ் உள்ளிட்ட நிரந்தர உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது தனது அரசிற்கு சர்வதேச அரங்கில் நெருக்கடி ஏற்படுத்துவது மட்டுமின்றி, சர்வதேச நிதியத்திடமிருந்து கடன் பெறுவதையும் தடுத்துவிடும் என்று அஞ்சுவதால், அமைதியை நோக்கி நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க தமிழ் தேச கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுகப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil