இலங்கையில் சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்க அதன் நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றான சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிறிலங்க படைகளின் தொடர்ந்த தாக்குதல்களினால் ஜனவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 07ஆம் தேதிவரையிலான 47 நாட்களில் 2,683 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 7,300 பேர் படுகாயமுற்றுள்ளனர் என்றும் கூறும் ஐ.நா.வின் அறிக்கை நேற்று வெளியானதையடுத்து, ஈழத் தமிழர்கள் படும் துயரம் குறித்து ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் மீண்டும் விவாதிக்க வேண்டும் என்று ஆஸ்ட்ரியா, மெக்ஸிகோ, கோஸ்டா ரீகா உள்ளிட்ட தற்காலிக உறுப்பினர் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
வரும் 26ஆம் தேதி ஈழத் தமிழர் நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என்று இந்த நாடுகளின் சார்பாக கோரப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பேரவையின் மற்ற உறுப்பினர்களின் ஆதரவும் இதற்கு உள்ளது என்று இந்நாடுகள் தெரிவித்துள்ளன. ஆனால் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இராணுவத் தாக்குதலால் தமிழர்கள் படும் துயரம் “சாதாரணமான உள்நாட்டுப் பிரச்சனைதான்” என்றும், அது “சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும்” எந்த விதத்திலும் ஒரு அச்சுறுத்தல் இல்லை என்றும் சீனா கூறியுள்ளது.
ஐ.நா.விற்கான சிறிலங்க தூதர் குழுவும் பாதுகாப்புப் பேரவையின் மற்ற உறுப்பினர்களிடம் இதே வாதத்தை முன்வைக்குமாறு வற்புறுத்தி வருகிறது. இந்த நிலையில் ‘மற்ற விவகாரங்கள்’ என்ற தலைப்பில் ஈழத் தமிழர் துயரம் குறித்து விவாதிக்க வாக்கெடுப்பு நடத்துமாறு கூட்டத்தை கூட்ட கோரிக்கை விடுத்துள்ள நாடுகள் கோரியுள்ளன. இப்பிரச்சனையில் மற்ற நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகியவற்றின் நிலை என்னவென்று தெரியவில்லை.
ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் 5 நிரந்தர உறுப்பினர்கள் மட்டுமின்றி, தற்காலிக உறுப்பினர்களாக 10 நாடுகள் உள்ளன. இவற்றில் 9 நாடுகள் வாக்களித்தால் பிரச்சனையை விவாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்த நிலையில்தான், எதிர்ப்பை கைவிட்டு, ஈழத் தமிழர்களின் துயரத்தை விவாதிக்க முன்வருமாறு சீனாவிற்கும் மற்ற நிரந்தர உறுப்பினர் நாடுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு திட்டமிட்டு நடத்திவரும் இனப் படுகொலையால் சொல்லொணாத் துயரத்தை சந்தித்துவரும் சாதாரண மக்களின் நிலையை விவாதிக்காமல் புறக்கணித்துவிட வேண்டாம்” என்று கூறியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் ப.நடேசன்,
“அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி கொன்று குவித்து போர் குற்றம் இழைத்துவரும் சிறிலங்க அரசு, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளையும், மருத்துப் பொருட்களையும் கூட அனுமதிக்காமல் மறுத்துவரும் அதன் நடவடிக்கை மானுடத்திற்கு எதிரான குற்றச் செயலே” என்று கூறியுள்ளார்.