Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாக்.கில் நெருக்கடி: வீட்டுக் காவலில் நவாஸ்

Advertiesment
பாக்கில் நெருக்கடி வீட்டுக் காவலில் நவாஸ்
, ஞாயிறு, 15 மார்ச் 2009 (11:42 IST)
இஸ்லாமாபாத் (ஏஜென்சி): பாகிஸ்தானில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு 3 நாள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி (என்) போராட்டத்தில் குதித்தது.

மேலும் இஸ்லாமாபாத்தில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி நாளை பேரணி நடத்தவும் அது திட்டமிடப்பட்டது. இதற்காக பாகிஸ்தானின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அக்கட்சித் தொண்டர்கள் இஸ்லாமாபாத்திற்கு குவியத் தொடங்கினர்.

இதனால் பாகிஸ்தானில் கடும் நெருக்கடியும் பதற்றமும் உருவானது. கலவரம் வெடிக்கலாம் என்ற பீதியும் நிலவுகிறது. இதையடுத்து நாடாளுமன்றத்தைச் சுற்றி ராணுவம் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டது.

இதற்கிடையே ஷெரீப்பின் கோரிக்கையை அதிபர் ஜர்தாரி ஏற்க மறுத்ததுடன், நவாஸ் கட்சித் தொண்டர்களை தேடிக் கைது செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் இன்று காலை கைது செய்யப்பட்டு 3 நாள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக, அவரது செய்தித் தொடர்பாளர் பர்வேஸ் ரஷீத் கூறினார். லாகூரில் உள்ள ஷெரீப்பின் வீட்டுக்கு வந்த காவல்துறையினர், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தகவலைத் தெரிவித்தனர்.

மேலும் ஷெரீப்பின் வீட்டைச் சுற்றி பெருமளவு காவ‌ல்துறை‌யினர‌் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானும் கைது செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமான எதிர்க்கட்சித் தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் ஷெரீப்பின் கைது நடவடிக்கை பற்றி பாகிஸ்தான் அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தான் நெருக்கடி, வீட்டுக்காவலில் நவாஸ்

Share this Story:

Follow Webdunia tamil