தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் ஆகிய இரண்டு பிரிவுகளில் வென்று, இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளார். உலகளவில் திரையுலகினருக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்ற ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் மொத்தம் 10 பிரிவுகளில் போட்டியிட்டது. இப்படத்தில் இசையமைத்த தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் ஆகிய 2 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், இந்த இரண்டு பிரிவுகளிலும் வென்று, இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டதும் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் மேடையேறிய ஏ.ஆர்.ரகுமான், விருதை பெற்றபோது 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசினார்.
இதன்மூலம் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் கூடுதல் பெருமை சேர்த்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.