ஐக்கிய நாடுகள் அவை உட்பட எந்தவொரு சர்வதேச நாடும், இனப் பிரச்சனையில் தலையிடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
சிறிலங்க மக்களை சர்வதேச நாடுகளின் கண்காட்சிப் பொருளாக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசு ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஹேமகமவில் ஆதார மருத்துவமனை கட்டட திறப்பு விழவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார் என்று விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத் தளமான புதினம் தெரிவிக்கிறது.
மகிந்த ராஜபக்ச தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், "நாங்கள் மக்களை எப்படி பாதுகாப்பது காக்கின்றோம் என்பதை அறிய வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலார் இங்கு வந்து பார்த்து விட்டு போகட்டும்.
அத்துடன், மக்களை பாதுகாக்கின்ற முறைகள் பற்றி சிறிலங்காவுக்கு சர்வதேச நாடுகள் பாடம் சொல்லித்தரத் தேவையில்லை" எனவும் கூறினார்.
நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.