வன்னியில் நேற்று (திங்கட்கிழமை) சிறிலங்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 25 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், 77 பேர் படுகாயமடைந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம், வள்ளிபுனம், சுதந்திரபுரம், மாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் சிறிலங்கப் படையினர் பரவலாக எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத் தளமான புதினம் தெரிவிக்கிறது.
இதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் பகுதியில் நேற்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 16 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 49 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கியிருந்த கொட்டகைகளின் மீதே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதில் ஒரு கொட்டகைக்குள் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், சிறிலங்க விமானப்படை நேற்று நடத்திய குண்டுத் தாக்குதலில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கப் படையினரால் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 15 தமிழர்களின் உடல்கள் நேற்று தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 12 உடல்கள் உரிய உறவினர்கள் எவரும் இல்லாத நிலையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன.