லண்டன்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை பின் லேடன் தலைமையிலான அல்-கய்டா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் அல்-கய்டா பயங்கரவாத அமைப்பின் முஸ்தஃபா அபு யாஸீத் இவ்வாறு விடுத்துள்ள எச்சரிக்கை அடங்கிய வீடியோவை பி.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்டது.
இந்த 20 நிமிட வீடியோவில் யாஸீத் அரபு மொழியில் கூறியது: "நாங்கள் முஸ்லிம் நாடுகள் எங்கும் உள்ள முஜாஹிதீனையும், தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகளையும் உங்களை எதிர்கொள்ள அழைத்து வருவோம். உங்கள் பொருளாதார மையங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி அவற்றை மண்ணோடு மண்ணாக்குவர்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில் அவர் கூறிய போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய அல்-கய்டா தலைவர் ஐமான் அல்-ஸவாஹிரி என்பவர் முடிவெடுத்தார் என்றார்.
பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் ராணுவத்திற்கும் யாஸீத் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ ஒளிபரப்பினால் பாகிஸ்தான் முன்பு வெளியிட்ட செய்தி ஒன்றும் பொய் என்று தெரியவந்துள்ளது. அதாவது தற்போது இந்த மிரட்டலை வெளியிட்டுள்ள அபு யாஸீத் என்பவர் 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று பாகிஸ்தான் வெளியுலகிற்கு அனுப்பிய செய்தி பொய்யாகியுள்ளது.