மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உள்ள தொடர்பு பற்றி இந்தியா அளித்த ஆதாரத்தின் மீது நடத்தப்பட்ட புலனாய்வு குறித்த அறிக்கையை, அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையிலான அமைச்சரவை பாதுகாப்பு விவகாரக் குழு இன்று பரிசீலனை செய்துள்ளது.
பாகிஸ்தான் அமைச்சரவை பாதுகாப்பு விவகாரக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா, ராணுவத்தின் முப்படைத் தளபதிகள் மற்றும் ராணுவ தலைமைத் தளபதி பர்வேஸ் கயானி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் சௌத்ரி அகமது முக்தார் உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகள் கிலானி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்றனர்.
மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்திய அளித்த ஆதாரங்களின் மீது நடத்தப்பட்ட புலனாய்வு அறிக்கையை சமர்ப்பிக்காமல் பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக இழுத்தடித்து வந்தது. இந்நிலையில், அதுதொடர்பான அறிக்கை மீது அந்நாட்டு அமைச்சரவைக் பாதுகாப்பு விவகாரக் குழுவின் பரிசீலனை முடிந்துள்ளதால் இன்றிரவு அல்லது நாளை அது இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் அமீர் கஸாப் உட்பட 5 பேர் மீது பாகிஸ்தான் தரப்பில் வழக்கு தொடரப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, மும்பை மீதான தற்கொலைத் தாக்குதல் இந்தியா அல்லது பாகிஸ்தானில் தீட்டப்படவில்லை. மாறாக ஐரோப்பிய நாடுகளில் இதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என பாகிஸ்தான் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் செய்திகள் வெளியானது நினைவில் கொள்ளத்தக்கது.