வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்படாலும் அணு விஞ்ஞானி ஏ.கியூ.கானுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்ததை ஏற்க மறுத்துள்ள அமெரிக்கா, அவரை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர், ஏ.கியூ.கான் விடயத்தில் அமெரிக்காவுக்கு சில வாக்குறுதிகளை பாகிஸ்தான் தெரிவித்திருந்தாலும், அவரை தொடர்ந்து கண்காணிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
ஏ.கியூ.கான் விடயத்திற்கு நாங்கள் எந்தளவு முக்கியத்துவம் தருகிறோம் என்பதை அவர்களும் (பாகிஸ்தான்) உணர்ந்துள்ளார்கள். அவர் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் உண்மையானதா என்பதையும் நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம் எனக் கூறியுள்ளார்.
வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு அணு சக்தி தொழில்நுட்பத்தை ரகசியமாக விற்பனை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாற்றின் கீழ் கடந்த 2004ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பால் விஞ்ஞானி அப்துல் காதிர் கான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
அவரை வீட்டுக்காவலில் வைத்தது தவறு என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், விஞ்ஞானி ஏ.கியூ.கான் குற்றமற்றவர் கடந்த 6 ஆம் தேதி அவரை வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.