இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 72 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 198 பேர் காயமடைந்துள்ளனர்.
சுதந்திரபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது நேற்று (ஞாயிறு) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிறிலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது, சிறிலங்கா வான்படை வேவு வானூர்தி வட்டமிட்டு நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கையில் இந்த பீரங்கித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் பலியானவர்களில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர்.
பலியானவர்களின் உடல்களையோ அல்லது காயமடைந்தவர்களையோ மீட்டு முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினர் தொடர்ந்து கடுமையான பீரங்கி தாக்குதல்களை நடத்தியதாகவும், பிற்பகல் 3 மணியளவில் எறிகணைத் தாக்குதல் ஓய்ந்த பின்னரே காயமடைந்தவர்கள் 198 பேர் மீட்கப்பட்டதாகவும் புதினம் இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.
எனினும் மீட்புப் பணிகளை முழுமையாக செய்ய முடியாத அளவுக்கு வன்னியில் எஞ்சியிருக்கும் ஒரே போக்குவரத்துப் பாதையான பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 72 என முதற்கட்ட தகவல்களில் உறுதி செய்தாலும் மீட்புப்பணிகள் முழுமையாக நடைபெறாத காரணத்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.