கோலாலம்பூர்: இலங்கையில் கொல்லப்பட்டு வரும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற வலியுறுத்தி மலேசியாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார்.
தமிழகத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன் ஆகியோர் தீக்குளித்து உயிரிழந்துள்ளனர்.
தற்போது, மலேசியாவில் வசித்து வந்த இலங்கை தமிழரான ராஜா என்ற 27 வயது வாலிபர் தீக்குளித்து உயிரிழந்திருக்கிறார்.
ரஹாங்கோட்டை ஆலான்தம்பிச் சாலை முனீஸ்வரர் ஆலயத்துக்கு எதிரே கார்கள் விற்பனை செய்யும் கடைக்கு முன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார். உயிருக்கு போராடிய அவரை எதிரே கடையில் இருந்த ஒருவர் தனது காரில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொண்டு வந்து ஊற்றினார்.
ஆனால் ராஜாவின் உடல் முழுவதுமாக கருகி அவர் உயிரிழந்தார்.
ராஜாவின் உடலுக்கு அருகே ஒரு பெரிய டைரி, பணப்பை, தீப்பெட்டி, மேலும் ஒரு பை ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
கருகிய நிலையில் உயிரிழந்த ராஜாவின் உடலை சிரம்பான் துவாங்கு ஜபார் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீசார் மீட்ட அவரது டைரியில், நீண்ட கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்திருக்கிறார்.
இலங்கையில் பிறந்த நான் பிழைப்பு தேடி மலேசியா வந்தேன். இங்கு எனக்கு நல்ல வேலை கிடைத்தது. காலையில் கார் கழுவும் வேலையும், மாலையில் சீன ஓட்டல் ஒன்றிலும் வேலை செய்து வந்தேன். இதன் மூலம் 1200 வெள்ளி (மலேசிய நாணயம்) வருமானம் கிடைத்து வருகிறது.
இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம், உடனடி பேச்சு வார்த்தை ஆகியவற்றை வலியுறுத்தி நான் தீக்குளிக்கிறேன். அப்பாவி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ அமெரிக்க புதிய அதிபர் ஒபாமா உடனடியாக இலங்கை சென்று போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும். அவருடன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, நார்வே சமாதான தூதர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் செல்ல வேண்டும்.
இந்த டைரியை வைகோவிடம் கொடுக்கவும். எனது கோரிக்கைகளை எல்லாம் வைகோ நிறைவேற்ற வேண்டும். இப்படிக்கு ராஜா என்று அந்த டைரியில் அவர் எழுதியிருந்தார்.
உயிரிழந்த ராஜா இரவு நேரத்தில் கோட்டை முனீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து இலங்கை அரசால் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை சோகமான குரலில் கூறி கவலைப்படுவாராம். இதை அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறி, இறந்த ராஜாவுக்காக அனுதாபப்பட்டனர்.