Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 3 March 2025
webdunia

இராணுவ ஆயுதக் குவியலை புலிகள் கைப்பற்றினர்! 1,000 படையினர் பலி!

Advertiesment
இராணுவ ஆயுதக் குவியலை புலிகள் கைப்பற்றினர்! 1,000 படையினர் பலி!
, சனி, 7 பிப்ரவரி 2009 (18:41 IST)
முல்லைத் தீவுப் பகுதி மீது பெரும் தாக்குதல் நடத்தும் நோக்குடன் தயாராக இருந்த சிறிலங்க படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தி அவர்களின் ஆயுதக் குவியலை கைப்பற்றியுள்ளனர்.

முல்லைத் தீவுப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான புதுக்குடியிருப்பைக் கைப்பற்றும் திட்டத்துடன் முன்னேற முயன்ற சிங்கள இராணுவத்தின் பெரும் படையை, தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த மன்னக்காந்தல், கியாப்பாப்புலவு ஆகிய இடங்களை நோக்கி ஈர்த்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இத்தாக்குதலைத் தொடர்ந்து நடந்த மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் புலிகள் அளித்த தகவலின் அடிப்படையில் தமிழ்நெட்.காம் செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகள் நடத்திய இந்த வலிந்த தாக்குதலின் முடிவில் சிங்கள இராணுவம் கொண்டு வந்திருந்த பெரும் ஆயுதக் குவியல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

20 எரிகணைகள், ஆயிரக்கணக்கான பிரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகள், அதனை ஏவும் கருவிகள், 10 லட்சம் தோட்டாக்கள் ஆகியன அந்த ஆயுதக் குவியலில் அடங்கும் என்று புலிகள் கூறியுள்ளனர்.
தங்களது படை மாட்டிக் கொண்டது தெரிந்ததையடுத்து ஆயுதக் குவியலை குண்டு வீசி வெடிக்க சிறிலங்க விமானப் படை அப்பகுதியில் குண்டு வீசித் தாக்கியதாகவும் அச்செய்தி கூறுகிறது.

இதற்கிடையே கியாப்பாப்புலவு என்ற இடத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கப் படையினர் மீது விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையான கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு வாகனத்தை ஒட்டி சென்று சிங்கள படை முகாமிற்குள் நுழைந்து வெடிக்கச் செய்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இத்தாக்குதலிற்கு செல்வதற்கு முன்னர் கரும்புலிப் படையினர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட படம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அச்சிடப்பட்டு வெளியாகும் ஈழ நாதம் எனுன் நாளிதழில் வெளிவந்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.

இதற்கிடையே சிறிலங்கப் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள வன்னிப் பகுதியின் பல இடங்களில் முகாமிட்டுள்ள சிறிலங்கப் படைகள் மீது விடுதலைப் புலிகள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்புத் தாக்குதலில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் மகளிர் படையினர் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil