மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுவுக்கு தொடர்பிருப்பதாக பாகிஸ்தான் புலனாய்வு நிறுவனம் தெரிவித்த கருத்துக்கு, வங்கவதேச அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வங்கதேச உள்துறை அமைச்சர் சஹாரா காதுன் கல்லூரி நிகழ்ச்சியில் ஆற்றிய உரை அந்நாட்டு நாளிதழ் ஒன்றில் செய்தியாக வெளியாகியுள்ளது.
அதில் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தனிப்பட்ட நாடு, தேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அப்படியிருக்கும் போது மும்பை தாக்குதல் நடத்தியவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியிருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.
இவ்விடயத்தில் உங்களுடைய ஒத்துழைப்பு, ஆலோசனை எங்களுக்குத் தேவை. நீங்கள் ஒத்துழைத்தால் பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை முற்றிலுமாக வேரறுப்பேன் என உறுதியளிக்கிறேன் என அமைச்சர் சஹாரா காதுன் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான செய்தியில் மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நடத்திய புலனாய்வில் வங்கதேசத்தில் உள்ள ஹர்கத்-உல்-ஜிஹாத் இஸ்லாமி (ஹுஜி) அமைப்பு இதனை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.