அணு ஆயுத குவிப்பால் மானுடத்திற்கு உருவாகியுள்ள ஆபத்தை தடுக்க அணு ஆயுத பயன்பாட்டைத் தடை செய்யும் பன்னாட்டு உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.
ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ‘அணு ஆயுத பரவல், ஆயுதக் கட்டுப்பாடு, அணு ஆயுதங்களின் எதிர்காலம் - அணு ஆயுதமற்ற நிலை சாத்தியமா?’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அணு ஆயுதங்களை முழுமையாக ஒழித்திட வேண்டும் என்ற கொள்கையில் இன்றுவரை இந்தியா நிலையாக உள்ளது என்று பேசினார்.
“உலகளாவிய அளவில் அணு ஆயுத ஒழிப்பை உறுதி செய்யும் ஒரு பன்னாட்டு உடன்படிக்கை வேண்டும் என்று கூறும் ஒரே அணு ஆயுத நாடு இந்தியாதான்” என்று கூறிய நாராயணன், இது தொடர்பாக 1988ஆம் ஆண்டு ஐ.நா.வில் இந்தியா முன்மொழிந்த அணு ஆயுத ஒழிப்பு தீர்மானம் அந்த இலக்கை நோக்கிய விரிவான ஒரு நகர்த்தலாகும் என்று கூறியுள்ளார்.
அணு ஆயுத அச்சுறுத்தலற்ற ஒரு உலகை உருவாக்க வேண்டும் என்ற இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மிக விருப்பமான ஆலோசனையை இன்றுவரை இந்தியா முன்னிருத்தி செயலாற்றி வருகிறது என்று நாராயணன் கூறியுள்ளார்.