வீட்டுக்காவலில் இருந்த பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் குற்றமற்றவர் எனக் கூறி வீட்டுக்காவலில் இருந்த அவரை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது பற்றிக் கேட்கப்பட்டது.
இது தமக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும், இதுதொடர்பாக மேலும் பல கருத்துக்களை தாங்கள் தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்க அயலுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளிடம் அணு ஆயுதப் பரவலுக்கு ஏ.கியூ.கான் வித்திடுவார் என தாங்கள் நம்புவதாகவும், வீட்டுக்காவலில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளது துரதிருஷ்டவசமானது என்றும் கூறினார்.
அணு சக்தி தொழில்நுட்பத்தை ரகசியமாக விற்பனை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாற்றில் ஏ.கியூ.கான் சம்பந்தப்படவில்லை என்ற உறுதிமொழியை அதிபர் ஒபாமாவுக்கும், அமெரிக்க அரசுக்கும் பாகிஸ்தான் அளிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
வடகொரியா, ஈரான், சூடான் ஆகிய நாடுகளுக்கு அணு சக்தி தொழில்நுட்பத்தை ரகசியமாக விற்பனை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாற்றின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கானை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் குற்றமற்றவர் எனக் கூறி நேற்று விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.