இந்தியா உட்பட எந்த நாட்டின் மிரட்டலையும் சமாளிக்க பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டின் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் தெரிவித்துள்ளார்.
வடகொரியா, ஈரான், சூடான் ஆகிய நாடுகளுக்கு அணு சக்தி தொழில்நுட்பத்தை ரகசியமாக விற்பனை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாற்றின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான், குற்றமற்றவர் என்று அறிவித்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கியூ.கான் (அப்துல் காதிர் கான்), பாகிஸ்தான் அரசு உறுதியாகவும், போதிய ராணுவ பலத்துடனும் உள்ளதால் எந்த மிரட்டலையும் சமாளிக்கும் எனக் கூறினார்.
அணு சக்தி தொழில்நுட்பத்தை ரகசியமாக விற்பனை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாற்று தொடர்பாக சர்வதேச அமைப்புகள் தங்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து கேட்கப்பட்ட போது, பாகிஸ்தான் அரசின் விசாரணைக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டவனாக இருப்பேன். எந்த அயல்நாட்டு அல்லது சர்வதேச அமைப்புக்கும் இதுதொடர்பாக நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என காட்டமாகப் பதிலளித்தார்.