கடற்புலிகளின் கடைசித் தளமான 'சாலை'-யைக் கைப்பற்றி விட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள்தான் தங்களின் அடுத்த இலக்கு என்றும் சிறிலங்கப் படையினர் அறிவித்தனர்.
முல்லைத்தீவிற்கு வடக்கிலுள்ள 'சாலை'யைக் கைப்பற்ற நடந்த சண்டையில், விநாயகம் என்பவர் உட்பட கடற்புலிகளின் முக்கியத் தலைவர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதனால் கடற்புலிகளின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு விட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களைத் தாங்கள் நெருங்கி விட்டதாகவும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கரும்புலிகளின் தாக்குதல்கள் இதையே காட்டுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கரும்புலிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தற்காப்புப் படையினராக இருக்கலாம் என்ற பிரிகேடியர் உதய நாணயக்கார, விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களே தங்களின் அடுத்த இலக்கு என்றார்.