தமிழீழ விடுதலைப் புலிகளை முழுதாக ஒழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்று சிறிலங்க பிரதமர் ரட்னசிறீ விக்ரமநாயக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
உலக நாடுகளின் அழுத்தத்தை நிராகரித்துள்ள அவர், "பல்வேறு தரப்பிடம் இருந்து அழுத்தங்கள் வந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரைப் பாதியில் நிறுத்த மாட்டோம்" என்றார்.
மேலும், "தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமுள்ள கடைசிப் பகுதிகளையும் அரசுப் படைகள் சுற்றிவளைத்து விட்டன. விடுதலைப் புலிகள் தாங்களாக தங்கள் முடிவைத் தேடிக்கொள்ளும் வரை படையினர் தாக்குதலை நிறுத்த மாட்டார்கள்.
ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுச் சரணடைய விரும்பும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நல்ல முறையில் வரவேற்கப்பட்டு மரியாதையாக நடத்தப்படுவார்கள். சிலர் சரணடைய முன்வந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு" என்றும் அவர் கூறினார்.
அதேநேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அவ்வியக்கத்தின் முக்கியத் தலைவர்கள் குறித்து பிரதமர் எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு எந்தவொரு கருணையும் கிடையாது என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், போர் முனையில் சிக்கியுள்ள 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ஏதுவாக, தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கப் படையினரும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.