Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வன்னியில் மருத்துவமனை மீது தொடர் தாக்குதல்: 13 தமிழர்கள் படுகொலை

Advertiesment
வன்னியில் மருத்துவமனை மீது தொடர் தாக்குதல்: 13 தமிழர்கள் படுகொலை
வவுனியா , வியாழன், 5 பிப்ரவரி 2009 (15:52 IST)
வன்னிப் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

வன்னியில் கடும் போருக்கு இடையே காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக தொடர்ந்து செயல்பட்டு வந்த கடைசி மருத்துவமனை மீது சிறிலங்கப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக வன்னியில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் சிறிலங்க அரசு செயலிழக்க வைத்துள்ளதாக புதினம் இணையதள செய்தி தெரிவிக்கிறது.

வன்னி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையின‌ர் பரவலான எறிகணை வீச்சுக்கள் காரணமாக படுகொலையான 22 தமிழர்களின் உட‌ல்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரத்துறை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்ததாக புதினம் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திரபுரம் மருத்துவமனைக்கு 12 உட‌ல்களும், உடையார்கட்டு மருத்துவமனைக்கு 10 உட‌ல்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்று (புதன்) 4வது நாளாக நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலால் மருத்துவமனையின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டு விட்டன.

மருத்துவமனையின் முதன்மைப் பகுதிகளான வெளிநோயாளர் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதிகள் ஆகியவை எறிகணைத் தாக்குதல்களில் முற்றிலும் நாசமாகிவிட்டன. இதனால் அந்த மருத்துவமனை இனி இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழுப் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நிலைகொண்டிருந்த போதிலும் கூட மருத்துவமனை மீது தொடர் தாக்குதலை சிறிலங்கப் படையினர் நடத்தி வருகின்றனர்.

நேற்று நடந்தப்பட்ட எறிகணை வீச்சுக்களின் போது காயமடைந்த பெருமளவிலான பொதுமக்கள் ஆங்காங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரபுரம் மருத்துவமனைக்கு நேற்று மாலை 5 மணி வரையிலும் காயமடைந்த 44 பேரும். உடையார்கட்டு மருத்துவமனைக்கு 14 பொதுமக்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு வயது குழந்தையும் அடங்கும்.

எனினும், பெரும் அவலமும் குழப்பமும் நிலவுவதால் இவ்வாறு காயமடைந்து வருவோரின் பெயர் விபரங்கள் உரிய முறையில் சேகரிக்க முடியாதிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி புதினம் செய்தி தெரிவிக்கின்றது.

Share this Story:

Follow Webdunia tamil