ஃபிரான்ஸ், தென்னாப்பிரிக்க தமிழர்கள் போராட்டம்
, வியாழன், 5 பிப்ரவரி 2009 (16:36 IST)
இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தத்தைக் கோரியும், தமிழின அழிப்பை நிறுத்தவும், சிறிலங்க அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், தமிழீழ மக்களின் தன்னாட்சியை வலியுறுத்தியும் ஃபிரான்ஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.சிறிலங்கா அரசு தனது 61 ஆவது வருட சுதந்திர தினத்தை கொண்டாடும் நாளில் (பிப்ரவரி 4) புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் தமிழ் மக்கள் ஒன்று கூடி தங்களின் எதிர்ப்பை எழுச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.ஃபிரான்சில் ஆர்ப்பாட்டம்அந்த வகையில் ஃபிரான்சின் தலைநகரான பாரிசின் வரலாற்று சிறப்புமிக்க பகுதியில் அமைந்துள்ள அமைதிச்சுவர் என்னும் நினைவிடத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் என்றுமில்லாத வகையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் ஒன்றுகூடி தங்களின் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் வோன் கோக் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் விண்ணப்பத்தையும் பெற்றுச் சென்றார்.அத்துடன், பல்வேறு நகர சபைகளின் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் தமிழின உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறிலங்க அரசால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனப் படுகொலைக்கு எதிராக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் கண்டனம்தென்னாபிரிக்காவில் நீதிக்கும் சமாதானத்திற்குமான ஒருமைப்பாட்டுக் குழு, தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தென்னாபிரிக்க தமிழர் கூட்டமைப்பு, அருட்பா கழகம், தென்னாபிரிக்க இஸ்லாமிய ஒன்றியம், ஆஃப்ரிக்க தேசியக் காங்கிரஸ், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, சிறுபான்மை முன்னணி ஆகிய அமைப்புக்கள் இணைந்து நேற்றுக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பல பதாகைகளை தாங்கியவாறு சிறிலங்கா அரசு ஈழத் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதைக் கண்டித்தும், இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்தின் தமிழின அழிப்புக்கு இராணுவ உதவிகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.இதில் கலந்து கொண்ட அனைவரும் இந்திய வழித் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், சிறிலங்காவுக்கு எதிரான கண்டன மனு டேர்பன் நகர மேயர் லோகி நாயுடுவிடம், தென்னாபிரிக்க அயலுறவு அமைச்சகத்திடம் வழங்கிடக் கோரி ஒப்படைக்கப்பட்டது.