இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்து வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கத்தோலிக்க போப் ஆண்டவர் 16ஆவது பெனடிக்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வாட்டிகனில் நேற்று (புதன்கிழமை) நடந்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போப் ஆண்டவர், சிறிலங்கப் படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆயுதப் போரை நிறுத்தி அமைதியை உருவாக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
"இலங்கையில் மோசமடைந்து வரும் மனித அவலங்களும், கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கையும் என்னை இப்படிக் கோருவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
இரண்டு தரப்பும், மனிதத்தையும் மனிதாபிமானச் சட்ட விதிகளையும் கருத்தில் கொள்வதுடன், பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்தையும் உறுதி செய்வது அவசியம் ஆகும்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை அனுமதிப்பதும் இரண்டு தரப்பினரின் கடமை.
மிக அருமையான அந்த நாட்டில் அமைதியும் புரிந்துணர்வும் உருவாவதற்கு கத்தோலிக்கர்கள் உட்பட அனைத்து மதத்தினராலும் வணங்கப்படும் தூய மடு மாதா வழியமைக்க வேண்டும் என் ஆசீர்வதிக்கிறோம்" என்றார் அவர்.