இலங்கையின் வடக்கே போர் நடக்கும் பகுதியில் செயல்பட்டு வந்த கடைசி மருத்துவமனை மீதும் கொத்து வெடிகுண்டுகள் (cluster bombs) வீசித் சிறிலங்கப் படையினர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 52 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் கோர்டன் வெய்ஸ் கூறுகையில், வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவமனை மீது சிறிலங்கப் படையினர் வான்வழியாக கொத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு பணியாற்றும் ஐ.நா ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது எனக் கூறியுள்ளார்.
வன்னியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு வலயம் என்று சிறிலங்க அரசு அறிவித்த பகுதியின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 52 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 80க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் வெய்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006இல் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்கு பின்னர் விடுதலைப்புலிகள் உள்ள பகுதிகள் மீது கொத்து குண்டுகள் வீசி சிறிலங்க அரசு தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை. அப்பகுதியில் 1.20 லட்சம் மக்கள் சிக்கியுள்ளதாக சிறிலங்க அரசு கூறினாலும், உண்மையான எண்ணிக்கை அதனை விட அதிகமாக இருக்கும் என தொண்டு அமைப்புகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.