இலங்கையில் மோசமடைந்து வரும் நிலைமைகளை கண்டறிவதற்காக தனது சிறப்பு பிரதிநிதியை சிறிலங்காவுக்கு அனுப்ப ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்-கி-மூன் தீர்மானித்துள்ளார்.
இதுதொடர்பாக சிறிலங்காவின் அயலுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக புதினம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பு அதிகாரி ராம்ரட் சாமுவேல் என்பவரை தனது சிறப்புப் பிரதிநிதியாக கொழும்புக்கு அனுப்புவதற்கு பான்-கி-மூன் தீர்மானித்துள்ளார்.
கொழும்பு செல்லும் ராம்சரட் சாமுவேல் முக்கிய அதிகாரிகளையும், அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்திப்பதுடன் தற்போதைய அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தொடாபான தகவல்களையும் அறிந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்லும் அவர், அங்குள்ள தற்போதைய நிலைமைகளை கண்டறிவதுடன் கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகளிடமும் தகவல்களை அறிந்து கொள்வார்.
பயணத்தின் முடிவில் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலரிடம் விரிவான அறிக்கை ஒன்றையும், அதுதொடர்பான தனது பரிந்துரைகளையும் அவர் சமர்ப்பிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.