Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வன்னி மக்களின் நலன் கருதி விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்: கொடை நாடுகள்

Advertiesment
வன்னி மக்களின் நலன் கருதி விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்: கொடை நாடுகள்
டோக்கியோ , புதன், 4 பிப்ரவரி 2009 (11:53 IST)
இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்து சிறிலங்கப் படையினரால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் பொதுமக்களின் நலன் கருதி விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் என டோக்கியோ கொடை நாடுகள் (நார்வே, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன்) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த வேண்டுகோளை ஏற்று விடுதலைப் புலிகள் சிறிலங்க அரசிடம் சரணடைந்தால், உள்நாட்டு பேச்சுவார்த்தை நடத்தி நிலையான அமைதிக்கு வழிவகுப்போம் என்றும் கொடை நாடுகள் உறுதியளித்துள்ளன.

இதுதொடர்பாக கொடை நாடுகள் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் கடும் போர் நடைபெறும் வடக்குப் பகுதியில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் நலன் குறித்து கொடை நாடுகள் ஒருமித்த வகையில் கவலை தெரிவித்துக் கொள்கிறது.

சிறிலங்க அரசால் மக்கள் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகள், அங்குள்ள மருத்துவமனைகள் மீது சிறிலங்கப் படையினரும், விடுதலைப்புலிகளும் தாக்குதல் நடத்தக் கூடாது.

போர் நடைபெறும் பகுதியில் சிக்கியிருக்கும் அப்பாவி மக்களுக்காக அனுப்பப்படும் உணவுப் பொருட்கள், மருந்துகள் செல்லும் பாதையை இரு தரப்பினரும் தடை செய்யக் கூடாது என்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களை போர் பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு இரு தரப்பினரும் உதவுவதுடன், அப்பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவன ஊழியர்களுக்கு குந்தகம் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும்.

சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளும், சிறிலங்க அரசும் மதிப்பளிக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை சிறிலங்க ராணுவம் கைப்பற்றி விட்டதால், இனியும் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பலி கொள்வதால் எந்த ஆதாயமும் இல்லை என்பதை இரு தரப்பினரும் உணர வேண்டும் என கொடை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

சிறிலங்காவில் மேலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு கொடை நாடுகள் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி போர்ப் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பது, சிறிலங்க அரசிடம் சரணடைவது, வன்முறையை துறப்பது, சிறிலங்க அரசின் பொது மன்னிப்பை ஏற்பது, நிலைத்த, நீடித்த அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அரசியல் கட்சியாக செயல்படுவது குறித்து தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தப்படும்.

போர் பகுதியில் சிக்கி படுகாயமடைந்துள்ள பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என விடுதலைப்புலிகள், சிறிலங்கை அரசுக்கு வலியுறுத்துவது.

மேலும், இலங்கையின் வடக்குப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை தற்காலிகமாக முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு ஐ.நா. அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இதர மனித உரிமை அமைப்புகளின் உதவியுடன் சிகிச்சை அளிப்பதுடன், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு அவர்களை மீண்டும் சொந்தப் பகுதிக்கே விரைவில் திருப்பி அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை சிறிலங்க அரசு, இந்தியா, ஐ.நா. ஆகியவற்றுடன் இணைந்து கொடை நாடுகள் மேற்கொள்ளும்.

பேச்சுவார்த்தை சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்த உதவும் அரசியல் தீர்வைப் பெறவும் கொடை நாடுகள் உதவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil