Publish Date: Tue, 03 Feb 2009 (18:30 IST)
Updated Date: Tue, 03 Feb 2009 (18:30 IST)
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் உடனடியாக இஸ்லாமாபாத் திரும்ப வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஷாஹித் மாலிக் இன்று இஸ்லாமாபாத் திரும்பியுள்ளார்.
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அளிக்கும் விளக்கம் குறித்து இறுதி ஆலோசனை நடத்த அவர் அழைக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் அயலுறவு அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்புக் கடிதத்தைத் தொடர்ந்து அவர் இன்று காலை இந்தியாவில் இருந்து இஸ்லாமாபாத் திரும்பினார்.
இந்தியா அளித்த ஆதாரங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக், சட்ட அமைச்சர் ஃபரூக் நேய்க், அயலுறவு செயலர் சல்மான் பஷீர் ஆகியோரைச் சந்தித்து அவர் விவாதிப்பார் எனத் தெரிகிறது.