அமெரிக்காவின் அயலுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஹிலாரி கிளிண்டன் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இம்மாத இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு உள்ள நட்புறவை மேம்படுத்தவும், சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் ஹிலாரி திட்டமிட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே அயலுறவு அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இந்நாடுகளுக்கு முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட், சீனாவுடனான அயலுறவுக் கொள்கைகளில் புதிய அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளது. அமெரிக்க-சீன உறவை மேம்படுத்தும் விடயத்தில் அயலுறவு அமைச்சகம் முக்கியப் பங்காற்றும் என்றார்.
இதற்கிடையில், இங்கிலாந்து அயலுறவுச் அமைச்சர் டேவிட் மிலிபந்த், ஜெர்மனி அயலுறவு அமைச்சர் ப்ராங் வால்டர் ஆகியோரை ஹிலாரி இன்று சந்தித்துப் பேச உள்ளார்.