வன்னிப் பகுதியில் சிறிலங்க அரசே அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் மீது இதுவரை 5,000க்கும் மேற்பட்ட குண்டுகளை சிறிலங்கப் படையினர் வீசியுள்ளதாகவும், இதில் ஏராளமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், படுகாயப்படுத்தப்பட்டும் உள்ளதாகத் தமிழ்நெட் இணையத் தளம் தெரிவிக்கிறது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் மீதும், சிறிலங்க அரசே அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் மீதும் எல்லாத் திசைகளிலும் நேற்று (திங்கட்கிழமை) சிறிலங்கப் படையினர் இடைவிடாது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். நாள் முழுவதும் பதுங்கு குழிகளில் மறைந்து கிடக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள பொதுமக்களில் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது என்று தனது செய்தியாளர் தெரிவிப்பதாக தமிழ்நெட் இணையத் தளம் தெரிவிக்கிறது.
இன்று வரை வன்னிப் பகுதியில் சிறிலங்க அரசே அறிவித்த பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கப் படையினர் வீசியுள்ள பல்குழல் ராக்கெட்டுகள், எறிகணைகளின் எண்ணிக்கை 5,000த்தைத் தாண்டியுள்ளது.
திங்கட்கிழமை நடந்த தாக்குதலில் புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு ஆகிய இரண்டு மருத்துவமனைகளுமே தாக்குதலிற்குள்ளாகின. இதில் செவிலியர் ஒருவர் உட்படி 21 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், வள்ளிபுரம், தேவிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் கடுமையான மோதல் நடந்து வருகிறது.