ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் செயல்பட்டு வந்த காவலர் பயிற்சிப் பள்ளி மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 18 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் உர்ஸகான்ஸ் மாகாணத்தில் செயல்பட்டு வந்த காவலர் பயிற்சிப் பள்ளிக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் பல கட்டடங்கள் சேதமடைந்ததாக அந்த மாகாண காவல்துறைத் தலைவர் ஜுமா குல் ஹிமத் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலில் காயமடைந்த 7 காவலர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதி தாலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்ததாக மாறி வருகிறது. கடந்த 2001இல் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய போது ஒடுக்கப்பட்ட தாலிபான்கள், தற்போது மீண்டும் புதிய பலத்துடன் உருவெடுத்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.