Publish Date: Mon, 02 Feb 2009 (12:34 IST)
Updated Date: Mon, 02 Feb 2009 (12:34 IST)
முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரைக் கைப்பற்ற முற்பட்ட சிறிலங்க இராணுவத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வலிந்த தாக்குதலில் 150 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பைத் தாக்கிக் கைப்பற்றுவதற்கு புறப்படத் தயார் நிலையில் இருந்த சிறிலங்க படையணிகள் மீது ஞாயிறு காலை தாங்கள் வலிந்து தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அதில் 150 படையினர் கொல்லப்பட்டதுடன், 350க்கும் மேற்பட்ட படையினர் காயமுற்றதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், இத்தாக்குதலில் சிறிலங்க இராணுவத்தின் 3 டாங்கிகளை தாக்கி அழித்ததாகவும் கூறியுள்ளனர்.
தாக்குதலிற்கு தயாராக இராணுவ வாகனங்களில் இருந்த படையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் படையினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கப் படைகளுடன் தொடர்ந்து சண்டை நடந்து வருவதாகவும் புலிகள் தெரிவித்துள்ளதாக புதினம் செய்தி கூறுகிறது.