ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உயிர் நீத்த முத்துக்குமாரின் தியாகம் வீண் போகக்கூடாது என்று சுவிஸ் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தன்னையே ஈந்து தியாகம் செய்த முத்துக்குமாருக்கு சுவிஸ் தமிழர் பேரவை தனது கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறது.
ஈழத் தமிழ் மக்களின் அவலத்தைக் கண்கொண்டு பார்க்க முடியாமல், பாரத தேசத்தின் பாதகச் செயலால் அவர்கள் கொன்று அழிக்கப்படும் கொடூரத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல், தமிழ் மக்களின் வரிப்பணத்தை சிங்களத்துக்கு வழங்கி சகோதர தமிழ் மக்களை பூண்டோடு அழித்துவிட நினைக்கும் இந்திய அரசின் கபடத்தனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தனது உயிரையே ஈந்து உயர்ந்து விட்டான் அந்த உண்மைத் தமிழன்.
தமிழர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து விட்டார்கள். பகைவர்கள் யாராயினும் அவர்களை எதிர்க்கத் துணிந்து விட்டார்கள். ஈழத் தமிழன், சொந்தச் சகோதரன், இரத்த உறவுக்காரன் வான்குண்டு வீச்சுக்கும், எறிகணை வீச்சுக்கும் இலக்காகிப் பலியாகும் அவலம் இனியும் தொடர வேண்டாம் எனத் தாய்த் தமிழகத்துத் தமிழன் பறைசாற்றி நிற்கின்றான்.
சொந்தச் சகோரதரனை அழிவிலிருந்த காப்பாற்ற முடியாத வாழ்வு எதற்கு என்று நினைத்தவனல்ல முத்துக்குமாரன். தான் இறந்த பின்னராவது தமிழனுக்குப் புத்தி வரட்டும், இந்திய நடுவண் அரசின் கல்மனம் கரையட்டும், நடிப்புச் சுதேசிகளின் சாயம் வெளுக்கட்டும் என்பதே அவனது எதிர்பார்ப்பு.
முத்துக்குமாரனை இழந்து வாடும் அவனது குடும்பத்தினரின் சோகத்தில் இணைந்து கொள்ளும் அதேவேளை, அந்த மகத்தான தியாகம் வீண் போகாமல் பார்த்துக் கொள்ளுமாறு தாய்த் தமிழக உறவுகளையும் சுவிஸ் தமிழர் பேரவை வேண்டிக் கொள்கிறது என அந்த அறிக்கை தெரிவிப்பதாக புதினம் செய்தி கூறுகிறது.