இலங்கையில் சிறிலங்கப் படையினர் நடத்தி வரும் தாக்குதலில் ஜனவரி மாதத்தில் மட்டும் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1,772 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, '2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி' என்ற பெயரில் விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையத் தளமான புதினம் வெளியிட்டுள்ள அட்டவணையில், சிறிலங்கப் படையினர் நடத்தி வரும் தாக்குதல்களில் ஜனவரி மாதத்தில் மட்டும் 439 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 1,772 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வன்னியில் மட்டும் 422 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1,768 பேர் படுகாயப்படுத்தப்பட்டு உள்ளனர். வன்னிக்கு வெளியில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 4 பேர் படுகாயப்படுத்தப்பட்டு உள்ளனர். வன்னிக்கு வெளியில் 15 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். சிறிலங்கப் படைகளால் 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை வட்டாரங்கள், நீதித்துறை வட்டாரங்கள், வடக்கு-கிழக்கு மனித உரிமைச் செயலகம், நம்பகத்தன்மையுடைய ஊடகச் செய்திகள் ஆகியவற்றிலிருந்து மிகவும் கவனமாகச் சேகரிக்கப்படும் ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் குறிகாட்டி அமைக்கப்பட்டுள்ளது என்று புதினம் தெரிவிக்கிறது.